Monday, September 30, 2019

இந்திய வெள்ளாட்டு இனங்கள்


இந்தியாவில் மட்டும் 19 அறியப்பட்ட இனங்கள் நாடு முழுவதும் பரவிக் காண்ப்படுகின்றன. இவை காணப்படும் இடங்களைப் பொறுத்து வகைப்படுத்தப்படுகின்றன.

ஹிமாலயன் இனங்கள் (மலைப்பிரதேசங்களில காணப்படுபவை)

இந்த இன ஆடுகள், ஜம்மு மற்றும் காஷ்மீர், ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்திரப்பிரதேசத்தின் சில இடங்களில் காணப்படுகின்றன.

ஹிமாலயன் இனம்
இவ்வின ஆடுகள் வெள்ளை நிற முடியுடன் மிக வலிமையானவை. இவை காடி, ஜம்பா, காஷ்மீரி என்று வளரும் இடங்களைப் பொறுத்து பல பெயர்களில் வழங்கப்படுகின்றன. இவை காங்ரா, குளுவாலி, சம்பா, சிர்மூர், சிம்லா, ஹிமாச்சலப்பகுதி மற்றும் ஜம்முவின் சில பகுதிகளில் பரவியுள்ளது. ஆண்மை நீக்கம் செய்யப்பட்ட ஆடுகள் மலைகளில் வண்டி இழுப்பதற்கும் பயன்படுகின்றன.


பாஸ்மினா
இவை சிறிய சுறுசுறுப்பான ஆடுகள் 3400 மீ ஹிமாலய மலை உயரங்களில் லக்சத் தீவுகள் மற்றும் ஸ்பிட்டி பள்ளதாக்குகளில் பரவுயுள்ளன. அதிகத் தரமுள்ள மென்மையான வெதுவெதுப்பான துணி தயாரிக்கத் தேவையான ரோமங்களைக் கொண்டுள்ளன. பாஸ்மினாவின்
 உற்பத்தி 75-150 கி வரை இருக்கும்.


செகு
செகு இன ஆடுகள் ஸ்பிட்டி பள்ளத்தாக்கு, காஷ்மீர் யாக்சர் போன்ற இடங்களில் காணப்படுகிறது. இது நல்ல இறைச்சியையும் சிறிதளவு பாலும் கொடுக்கக்கூடியது.

ஜமுனா பூரி
உத்திரப்பிரதேசத்தின் எட்டாவாமாவட்டத்தைச் சேர்ந்த இவ்வினம் மிகப்பெரிய தொங்கும் காதுகளையும், நல்ல உயரமும் உடையவை. இது ரோமன் மூக்குடன் நீளமான அடர்ந்த முடியை உடையது. கொம்புகள் சிறியவையாக தட்டையாக இருக்கும். கிடா ஆடுகள் 65-86 கிலோ எடையும் பெட்டை ஆடுகள் 45-61 கிலோ எடையும் கொண்டிருக்கும். தினமும் 2.25 - 2.7 கி.கி பால் தரக்கூடியது. இதன் பால் உற்பத்தி 250 நாட்களில் 250-300 கி.கி வரை 3.5 சதவிகிதம் கொழுப்புச் சத்துடன் இருக்கும். இந்த இனங்கள் இங்கிலாந்தின் ஆங்கிலோ நுபியன்என்னும் இனத்தை உருவாக்க கலப்பின ஆடாகப் பயன்படுத்தப்படுகிறது.
பீட்டல்
இது முக்கியமாக பஞ்சாபில் காணப்படுகிறது. ஜமுனாபுரியிலிருந்தே இவ்வினம் உருவாக்கப்படுகிறது. சிவப்பு நிறத்தில் வெள்ளை பொட்டுக்களுடன் கூடியது. கிடாக்கள் 65-85 கிலோவும், பெட்டை ஆடுகள் 45-61 கி.கி எடையும், பால் அளவு நாளொன்றுக்கு 1 கி.கி அளவும் இருக்கும். கிடாக்கள் தாடியுடன் இருக்கும்.


பாஹாரி
இவ்வினம் உத்திரப் பிரதேசத்தின் எட்டாவா, எட்டா, ஆக்ரா, மதுரா மாவட்டங்களிலும் கமல், பானிபட், சோடக் பகுதிகளிலும் (ஹரியானா) காணப்படுகிறது. இது சிவப்பு, வெண்மை நிறங்களில் உள்ளது. கொம்புகள் நீண்டும், உரோமங்கள் குட்டையாகவும் உள்ள இவ்வாடுகள் அளவில் சிறியவை. கிடா ஆடுகள் 36-45 கிலோவும், பெட்டை ஆடுகள் 27-36 கிலோ எடையும் கொண்டவை. இவைக் கொட்டில் முறையில் பொதுவாக வளர்க்கப்படும். பால் உற்பத்தி 0.90 -1.25 கி.கிமும் கொழுப்புச்சத்து 50 சதவிகிதம் அளவும் பால் தரும் காலம் 108 நாட்களாகவும் இருக்கும். இவை 12-15 மாதங்களுக்கு இரு முறை மட்டுமே குட்டி போடுபவை.

ஆதாரம்: www.tanuvas.ac.in


தமிழ்நாட்டு ஆடு வகைகள்


வெள்ளாடு வளர்ப்பு
மிகக்குறைந்த செலவில் பசு, எருமை போன்ற கால்நடைகளில் வளர்க்க முடியாத சூழலில் கூட வெள்ளாடுகளை வளர்க்கலாம். இதற்கு முதலீடு மிகவும் குறைவு. மேலும் வெள்ளாடுகள் மழை அளவு குறைவாக உள்ள வறண்ட நிலங்களில் கூட வளர்த்தல் எளிது. எனவே தான் வெள்ளாடுகளை ஏழைகளின் பசுஎன்று அழைக்கின்றனர்.
வெள்ளாடுகள் (மாமிசம்) இறைச்சி மற்றும் பால் தேவைக்காக வளர்க்கப்படுகின்றன. நிலமற்ற மற்றும் குறுநில ஏழை விவசாயிகளுக்கு வாழ்வுக்கு சிறந்த வழிகாட்டியான ஆடுகள் அதிக ஊட்டச்சத்துள்ள பாலை வழங்குகின்றன. வெள்ளாடுகள் ஆங்காங்கு இருக்கும் புதர்ச்செடிகளில் மேயும். அசாதாரமாண தட்பவெப்ப சூழ்நிலைகளையும் தாண்டி கிடைக்கும் புல் பூண்டுகளைக் கொண்டே உயிர் வாழக்கூடியது. உலகில் மாட்டுப் பாலை விட சில இடங்களில் ஆட்டுப்பாலையே விரும்பி அருந்துகின்றனர். அது போல் ஆட்டு இறைச்சியும், ஒரு முக்கிய உணவாகும். உலக சுகாதார நிறுவனப் கருத்துப்படி பசும்பாலை அருந்துவதால் வயிறு, தோல், காது போன்றவற்றில் வரும் ஒவ்வாமை 70 சதவிகிதம் பசும்பாலினால் வருவதில்லை. வரலாற்றுக்கூற்றுப்படி ஆடுகளே முதன் முதலில் வளர்க்கப்பட்ட மிருகம் ஆகும். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் முன்பிருந்தே மனிதர்கள் ஆட்டின் பால், இறைச்சி, முடி, தோல், போன்றவற்றைப் பயன்படுத்தி வந்துள்ளனர்.


தமிழ்நாட்டில் மூன்று வகையான வெள்ளாட்டு இனங்கள் உள்ளன.


கன்னி ஆடுகள்:-
இவை திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் காணப்படும். உயரமான ஆடுகள், கருமை நிறம் கொண்டது. முகத்திலும், காதுகளிலும், கழுத்திலும் இரு வெள்ளை கோடுகள் இருக்கும். அடி வயிற்றுப் பகுதி மற்றும் கால்களின் உட்புறத்தில் வெள்ளைநிறம் காணப்படும். இத்தகைய நிறம் அமையப்பெற்ற ஆடுகளை பால்கன்னிஎன்றும், வெண்மை நிறத்திற்குப் பதிலாக செம்பழுப்பு நிறம் கொண்டவைகளை செங்கன்னிஎன்றும் 
அழைப்பார்கள்.

கொடி ஆடுகள்

இவை தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, எட்டயபுரம் மற்றும் விளாத்திக்குளம் வட்டங்களில் பெரும்பாலும் காணப்படுகிறது. மிக உயரமான இவ்வகை ஆடுகள் நீண்ட கழுத்தும், உடலும் கொண்டவை. வெள்ளையில் கருமை நிறம் சிதறியது போன்ற நிறம் கொண்ட ஆடுகளை கரும்போரைஎன்றும், வெள்ளையில் செம்பழுப்பு நிறம் கொண்டவைகளை செம்போரைஎன்றும் அழைப்பர்.

சேலம் கருப்பு

இந்த வகையான ஆடுகள் சேலம் மாவட்டத்தில் குறிப்பாக ஓமலூர், மேச்சேரிப் பகுதிகளில் அதிகம் காணப்படுகின்றன. மேலும் தர்மபுரி, ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களின் சில பகுதிகளிலும் காணப்படுகிறது. இவை பெயருக்கேற்றபடி முற்றிலும் கருமை நிறம் கொண்டவை. உயரமானவை மற்றும் மெலிந்த உடலமைப்பு கொண்டவை.


ஆதாரம்: www.tanuvas.ac.in

Sunday, September 29, 2019

கால்நடை வளர்ப்பு பயிற்சி

கலப்பு இன மாடுகள்

கலப்பின ஜெர்சி
  • வகைப்படுத்தாத உள்நாட்டு மாட்டினங்களை ஜெர்சி இன விந்துக்களை கொண்டு
  • கருவூட்டல் செய்யும் போது ஜெர்சி கலப்பின மாடுகள் உருவாக்கப்படுகின்றன.
  • ஜெர்சி கலப்பின மாடுகள் நமது நாட்டின் சமவெளிப்பகுதிகளுக்கு ஏற்ற மாட்டினங்கள்
  • இவைகள் சுமாரான உடல் அமைப்பையும், அதிக வெப்பம் தாங்கும் திறனையும் பெற்றுள்ளன.
  • உள்நாட்டு இனங்களின் பால் உற்பத்தி திறனுக்கு ஏற்ப, ஜெர்சி கலப்பின மாடுகள்
  • 2 முதல் 3 மடங்கு அதிக பால் உற்பத்தி திறனை கொண்டிருக்கும்.

கலப்பின ஹோல்சியன் பிரீசியன்
  • கலப்பின ஹோல்சியன் பிரிசியன் மாடுகள் குறைந்த வெப்பம் தாங்கும் திறனை பெற்றிருப்பதால், இவைகள் நம் நாட்டின் குளிர் பிரதேசங்களுக்கும், மலைப்பகுதிகளுக்கும் மிகவும் ஏற்றவை.
  • இவைகள் ஜெர்சி கலப்பின மாடுகளைவிட குறைவான நோய் எதிர்ப்புத் திறனை பெற்றுள்ளன.
  • இவைகள் அதிக பால் உற்பத்திதிறனை பெற்றிருந்தாலும், ஜெர்சி கலப்பின மாடுகளை விட பாலில் குறைவான கொழுப்பு சத்து கொண்டவை.

ஆதாரம்: www.tanuvas.ac.in

அயல் நாட்டு மாட்டினங்கள்

ஜெர்சி
  • இங்கிலாந்தின் ஜெர்சி தீவில் உருவான சிறிய மாட்டினம்
  • இந்தியாவின் தட்பவெப்பநிலைக்கு  இந்த இன மாடுகள் நன்கு ஏற்றவையாக உள்ளன. எனவே இவை இந்தியாவின் நாட்டு மாடுகளின் கலப்பினத்திற்கு பொதுவாக உபயோகிக்கப்படுகின்றன
  • இம்மாடுகள் சிவப்பு கலந்த பழுப்பு நிறத்துடன் காணப்படும்
  • இம்மாடுகள் தட்டையான முன்பகுதி தலையுடன், கச்சிதமான உடலமைப்புடனும் காணப்படும்
  • இம்மாட்டினங்களின் பாலில் 5.3 % கொழுப்பு மற்றும் 15% இதர திட சத்துக்களும் இருக்கிறது.


ஹோல்ஸ்டியன் ஃபிரீசியன்
  • இம்மாட்டினம் நெதர்லாந்தின் வட பகுதிகளில் குறிப்பாக ஃபிரீஸ்லாந்து பகுதியில் உருவானது
  • இவை நன்கு உருவான உடலமைப்புடன், பெரிய பால் மடிகளையும் கொண்டவை
  • இவை அதிக பால் கொடுக்கும் பெரிய மாட்டினங்களாகும். நன்கு வளர்ந்த மாடுகள் 700 கிலோ உடல் எடை வரையுடன் இருக்கும்
  • இவற்றின் உடல் கருப்பு மற்றும் வெள்ளை நிற திட்டுகளுடன் காணப்படுவதால் இவற்றை எளிதில் அடையாளம் காணமுடியும்
  • ஒரு கறவை காலத்தில் இவற்றின் சராசரி பால் உற்பத்தி 6000-700 கிலோக்களாக இருக்கும். ஆனால் இம்மாட்டினங்களின் பாலில் கொழுப்புச்சத்து குறைவாக இருக்கும் (3.45%)

பிரவுன் ஸ்விஸ்
  • இம்மாட்டினங்கள் ஸ்விட்சர்லாந்தின் மலைப்பகுதிகளிலிருந்து தோன்றியவை
  • ஸ்விட்சர்லாந்தில் இம்மாட்டினங்கள் பெயர்பெற்றவை. மேலும் இவற்றின் உடல் நன்கு பெரியதாகக் காணப்படுவதுடன், இவற்றின் பால் உற்பத்தியும் அதிகம்
  • கரன் ஸ்விஸ் எனப்படும் மாட்டினம் இந்தியாவின் நாட்டு மாடுகளுடன் பிரவுன் ஸ்விஸ் மாட்டினங்களை கலப்பினம் செய்து உருவாக்கப்பட்ட ஒரு சிறந்த கலப்பின மாட்டினமாகும்.

ரெட் டேன்
  • டேனிஸில் உருவான இம்மாட்டினங்களின் உடல் சிவப்பு நிறத்துடனோ அல்லது சிவப்பு கலந்த பழுப்பு நிறத்துடனோ அல்லது அடர்ந்த பழுப்பு நிறத்துடனோ காணப்படும்
  • இவை நன்கு வளர்ந்த பெரிய மாட்டினங்களாகும். காளைகள் 950 கிலோ உடல் எடை வரை இருக்கும். பசு மாடுகள் 600 கிலோ வரை உடல் எடையுடன் இருக்கும்
  • ரெட் டேன் மாடுகளின் பால் உற்பத்தி 3000-4000 கிலோக்களாக, 4 சதவிகிதம் அல்லது அதற்கு மேற்பட்ட கொழுப்புச்சத்துடன் இருக்கும்

ஆயிர்ஷையர்
  • இம்மாட்டினங்களின் தாயகம் ஸ்காட்லாந்திலுள்ள ஆயிர்ஷையர் ஆகும். இவை பால் உற்பத்தி செய்யும் அழகான மாட்டினங்களாகும். இவை மிகுந்த சுறுசுறுப்புடன் இருப்பதால் இவற்றை மேலாண்மை செய்வது கடினம்
  • இவற்றின் பால் உற்பத்தி குறிப்பிடும் படியாக இல்லை, மேலும் பாலின் கொழுப்புச்சத்தும் மற்ற மாட்டினங்களை போலவே (4%) இருக்கும்.
  • இந்த மாட்டினம் டன்லப் மாடு அல்லது கன்னிங்ஹாம் மாடு என்றும் அழைக்கப்படுகிறது

கராச்சி
  • இம்மாட்டினங்கள் பிரான்சின் கராச்சி எனும் தீவிலிருந்து தோன்றியவை
  • இவற்றின் பாலில் அதிக அளவு புற்றுநோயினைத் தடுக்கும் பீட்டா கரோட்டின் எனப்படும் சத்து இருப்பதால் பொன்னிறத்துடன் இருக்கும்.
  • இம்மாட்டினங்களின் பாலில் அதிக அளவு கொழுப்புச்சத்தும் (5%), அதிக அளவு புரதச்சத்தும் (3.7%) இருக்கிறது
  • கராச்சி மாடுகள் ஒரு வருடத்தில் 6000 லிட்டர்கள் வரை பால் உற்பத்தி செய்யும்
  • இம்மாட்டினங்கள் அதிக பால் உற்பத்தி செய்வதாலும், கன்று ஈனும் போது மிகக்குறைந்த சிரமங்களே இருப்பதாலும், நீண்ட நாள் வாழ்வதாலும் இவற்றை வளர்க்கும் பால் பண்ணையாளர்களுக்கு அதிக நன்மைகள் உண்டு
ஆதாரம்: www.tanuvas.ac.in

நாட்டு மாடுகளின் இனங்கள்


உள்நாட்டு மாட்டினங்கள்
பால் உற்பத்திக்கு வளர்க்கப்படும் உள்நாட்டு மாட்டினங்கள்



கிர்
  • கிர் பசு மாட்டினம் தேசன், குஜராத்தி, கத்தியவாரி, சோர்தி மற்றும் சூரத்தி போன்ற பெயர்களிலும் அறியப்படுகிறது
  • குஜராத்தின் தெற்கு கத்தியவார் பகுதியிலுள்ள கிர் காடுகளில் இருந்து இம்மாட்டினம் உருவானது
  • இதன் தோல் வெள்ளை நிறத்துடன், அடர்ந்த சிவப்பு நிற அல்லது சாக்லேட் பழுப்பு நிற திட்டுக்களுடன் காணப்படும். சில சமயங்களில் கருப்பு அல்லது முழுவதும் சிவப்பு நிறமாகவும் காணப்படும்
  • கொம்புகள் வளைந்து, அரை வட்ட நிலா போன்று இருக்கும்
  • இவ்வின மாட்டினங்களின் பால் உற்பத்தி 1200-1800 கிலோவாகும்
  • முதல் முறை கன்று ஈனும் வயது சராசரியாக 45-54 மாதங்களாகவும், கன்றுகள் ஈனுவதற்கான இடைவெளி சராசரியாக 515-600 நாட்களாக இருக்கும்

சிவப்பு சிந்தி
  • இவ்வினம் சிவப்பு கராச்சி மற்றும் சிந்தி என்றும் அறியப்படுகிறது
  • பாகிஸ்தானின் கராச்சி மற்றும் ஹைதராபாத் மாவட்டங்களில் இம்மாட்டினங்கள் அதிகம் காணப்படுகின்றன
  • இவை சிவப்பு நிறமாகக் காணப்படும். இவற்றின் உடல் அடர்ந்த சிவப்பு நிறம் முதல் வெளிறிய சிவப்பு நிறத்துடன் வெள்ளை நிறக் கோடுகளுடன் காணப்படும்
  • இவ்வின மாடுகளின் பால் உற்பத்தி சராசரியாக 1100-2600 கிலோ வரை இருக்கும்
  • சிந்தி மாட்டினங்கள் வெவ்வேறு இனங்களுடன் கலப்பினம் செய்வதற்கு பெரும்பாலும் உபயோகப்படுத்தப்படுகின்றன
  • முதல் முறை கன்று ஈனும் வயது சராசரியாக 39-50 மாதங்களாகவும், கன்று ஈனும் இடைவெளி சராசரியாக 425-540 நாட்களாக இருக்கும்


சாஹிவால்
  • சாஹிவால் மாட்டினம் தற்பொழுது பாகிஸ்தானில் உள்ள மான்டிகோமெரி மாவட்டத்தில் இருந்து தோன்றியது
  • இந்த மாட்டினம் லோலா (தளர்ந்த தோல்), லம்பி பார், மான்டிகோமெரி, முல்தானி, டெலி என்றும் அறியப்படுகிறது
  • இவற்றின் தோல் சிவப்பு கலந்த பழுப்பு நிறத்துடன் அல்லது வெளிறிய சிவப்பு நிறத்துடன் சில சமயங்களில் வெள்ளைத் திட்டுகளுடன் காணப்படும்
இம்மாட்டினங்களின் சராசரி பால் உற்பத்தி 2725-3175 கிலோவாகவும், பால் கறவைக்காலம் 300 நாட்களாகவும் இருக்கும்


ஹலிக்கார்
  • தற்பொழுது கர்நாடக மாநிலத்தின் ஒரு பகுதியாக உள்ள விஜய நகரம் எனும் பகுதியிலிருந்து இவ்வினம் தோன்றியது
  • இம்மாட்டினத்தில் நிறம் சாம்பல் நிறமாக இருக்கும்
  • சரியான வடிவத்துடன், நன்கு அமைந்த தசைப்பிடிப்புகளுடன் நடுத்தர அளவில் இருக்கும்
  • இம்மாட்டினங்கள் இவற்றின் வேலை செய்யும் திறனுக்கு, குறிப்பாக இவற்றின் வண்டி இழுக்கும் திறனுக்கு பெயர் பெற்றவை
அம்ரிட்மஹால்
  • இம்மாட்டினங்கள், கர்நாடகாவிலுள்ள ஹாசன், சிக்மகளூர் மற்றும் சித்ரதுர்கா மாவட்டங்களிலிருந்து தோன்றியவை
  • அம்ரிட்மஹால் மாடுகள் சாம்பல் நிறத்துடன் காணப்பட்டாலும், பெரும்பாலும் இவற்றின் தோல் நிறம் வெள்ளை நிறத்திலிருந்து கருப்பு நிறம் வரை பல்வேறு நிறங்களில் காணப்படும்
இவற்றின் கொம்புகள் நீண்டு, கூரான கருப்பு நிற முனைகளைக் கொண்டிருக்கும்
கிலாரி
  • இம்மாட்டினங்கள் மகாராஷ்டிராவிலுள்ள சோலாப்பூர் மற்றும் சிதாபூர் மாவட்டங்களிலிருந்து தோன்றியவை
  • சாம்பல் கலந்த வெள்ளை நிறத்துடன் காணப்படும்
  • இவற்றின் நடை வேகமாக இருக்கும்
காங்கேயம்
  • இம்மாட்டினங்கள் தமிழ்நாட்டின் ஈரோடு, கோயம்பத்தூர் மாவட்டங்களிலுள்ள காங்கேயம், தாராபுரம், பெருந்துறை, ஈரோடு, பவானி மற்றும் கோபிச்செட்டிபாளையம் வட்டங்களின் ஒரு பகுதியிலிருந்து தோன்றியவை
  • திரு.நல்லதம்பி சர்க்கார் மன்றாடியார் மற்றும் பாளையகோட்டையின் தெய்வத்திரு.பட்டோகர்,  போன்றோரின் முயற்சியால் இம்மாட்டினங்கள் தனித்துவம் பெற்றவை
  • பிறக்கும்போது இம்மாட்டினங்களின் தோல் சிவப்பு நிறமாக இருந்து பின் ஆறு மாத வயதில் சாம்பல் நிறமாக மாறிவிடும்
  • காளை மாடுகள் சாம்பல் நிறத்துடன் கூடிய முதுகுப்பகுதியையும், முன், பின் கால்களையும் கொண்டவை
  • வண்டியிலுக்கும் காளைகள் சாம்பல் நிறத்துடன் காணப்படும்
  • பசு மாடுகள் சாம்பல் மற்றும் வெள்ளை நிறத்துடன் காணப்படும். ஆனால் இவ்வினத்தினைச் சேர்ந்த சில மாடுகள் சிவப்பு, கருப்பு, பழுப்பு மற்றும் பல நிறங்கள் கலந்த கலவையுடன் கூடிய தோலைக் கொண்டிருக்கும்
இவற்றின் கண்கள்  அடர்த்தியான நிறத்துடன், அவற்றை சுற்றி கருவளையங்கள் காணப்படும்

பர்கூர்
  • ஈரோடு மாவட்டத்தின் பர்கூர் மலையினைச் சுற்றியுள்ள பகுதிகளில் இம்மாட்டினம் காணப்படுகிறது
  • பர்கூர் மாட்டினங்களின் தோல்  பழுப்பு நிறத்தில் வெள்ளை நிறத்திட்டுகளுடன் காணப்படும். சில சமயங்களில் வெள்ளை மற்றும் அடர்த்தியான பழுப்பு நிறங்களிலும் இம்மாட்டினங்கள் காணப்படும்
  • நன்கு அமைந்த உடற்கட்டுடன், நடுத்தர அளவில் இம்மாட்டினங்கள் காணப்படும்

உம்பலாச்சேரி
  • இம்மாட்டினங்கள் ஜாதி மாடு, மொட்டை மாடு, மோலை மாடு மற்றும் தெற்கத்தி மாடு என்றும் அழைக்கப்படுகின்றன
  • இவை தமிழ்நாட்டின் தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் காணப்படுகின்றன
  • உம்பாலச்சேரி இனத்தினைச் சேர்ந்த கன்றுகள் பிறக்கும் போது பொதுவாக சிவப்பு அல்லது பழுப்பு  நிறத்துடன் இருப்பதுடன்  அவற்றின் முகம்,  வால் மற்றும் கால்களில் வெள்ளை நிறத்திட்டுகள் காணப்படும்
  • வண்டி மாடுகளுக்கு கொம்பு தீய்ப்பது பொதுவாக உம்பலாச்சேரி இன மாடுகளில் பின்பற்றப்படுகிறது
புலிக்குளம்
  • இம்மாட்டினங்கள் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மற்றும் சேலம் மாவட்டங்களிலும், கர்நாடகா மாநிலத்தின் பெங்களூர் மாவட்டத்திலும் காணப்படுகின்றன
  • புலிக்குளம்/ஆலம்பாடி காளைகள் அடர்ந்த சாம்பல் நிறத்துடன், கருப்பு நிறமாக காணப்படுகின்றன. பசு மாடுகள் சாம்பல் நிறத்துடனோ அல்லது வெள்ளை நிறத்துடனோ காணப்படும்
  • மைசூர் பகுதி மாடுகளைப் போன்றே இம்மாடுகளும் பின்புறம் வளைந்த கொம்புகளைக் கொண்டிருக்கும்
இம்மாட்டினங்கள் நன்கு சுறுசுறுப்பாக இருப்பதால் வேலைக்கு பயன்படுகின்றன. ஆனால் வண்டிகளை வேகமாக இழுக்காது
தார்பார்க்கர்
  • தென்கிழக்கு பாகிஸ்தானிலுள்ள தார்பார்க்கர் மாவட்டத்தில் இம்மாட்டினங்கள் தோன்றியவை
  • இவை வெள்ளை சிந்தி, சாம்பல் சிந்தி, தாரி என்றும் அறியப்படுகின்றன
  • இம்மாட்டினங்களின் தோல் வெள்ளை மற்றும் வெளிறிய சாம்பல் நிறத்துடன் காணப்படும்
  • இம்மாட்டினங்களின் காளைகள் வண்டி இழுப்பதற்கும்,  உழுவதற்கும் பயன்படுகின்றன. பசு மாட்டினங்கள் அதிக பால் உற்பத்திக்கு பெயர் பெற்றவை (1800-2600 கிலோ)
  • முதல் கன்று ஈனும் வயது 38-42 மாதங்களாகவும், கன்று ஈனும் இடைவெளி 430-460 நாட்களாக இருக்கும்

ஹரியானா
  • ஹரியானா மாநிலத்தின் ரோடக், ஹிசார், ஜின்த் மற்றும் குவார்கன் மாவட்டங்களிலிருந்து இம்மாட்டினம் தோன்றியது
  • இவற்றின் கொம்புகள் சிறியதாக இருக்கும்
  • காளை மாடுகள் வேலை செய்யும் திறனுக்கு பெயர் பெற்றவை
  • இவ்வினத்தினைச் சேர்ந்த பசு மாடுகளின் பால் கொடுக்கும் திறன் அதிகம். நாள் ஒன்றுக்கு ஒரு மாடு சராசரியாக  1.5 கிலோ பால் உற்பத்தி செய்யும். கறவை காலம் 300 நாட்கள்
  • ஒரு கறவை காலத்தில் 600-800 கிலோ பால் உற்பத்தி செய்யக்கூடியவை. முதல் கன்று ஈனும் வயது சராசரியாக 40-60 மாதங்கள்

காங்ரெஜ்
  • இவ்வின மாடுகள் வாட்தாத் அல்லது வேஜ்ட் அல்லது வாட்தியார் என்ற பெயர்களாலும் அறியப்படுகின்றன
  • குஜராத் மாநிலத்தின் வடகிழக்கு கட்ச் வளைகுடா பகுதியிலும் அதன் அருகிலுள்ள ராஜஸ்தான் மாநிலத்தின் பார்மர் மற்றும் ஜோட்பூர் மாவட்டங்களிலிருந்தும் இம்மாட்டினங்கள் தோன்றின
  • இம்மாட்டினங்கள் வெள்ளை கலந்த சாம்பல் நிறம் அல்லது அடர்ந்த கருப்பு நிறத்துடன் காணப்படும்
  • காங்ரெஜ் மாட்டினங்கள் வேகமான, அதிக திறனுடைய வேலைகளுக்கு பெயர் பெற்றவை. உழவிற்கும் வண்டி இழுப்பதற்கும் பயன்படுகின்றன
  • இம்மாட்டினத்தினைச் சேர்ந்த பசுக்களின் பால் உற்பத்தி 1360 கிலோக்களாகும்

ஓங்கோல்
  • இம்மாட்டினங்கள் நெல்லூர் என்றும் அறியப்படுகின்றன
  • இவற்றின் தாயகம் ஆந்திரபிரதேசத்தின் ஓங்கோல் வட்டம் மற்றும் குண்டூர் மாவட்டமாகும்
  • இவற்றின் சராசரி பால் உற்பத்தி 1000 கிலோக்கள். முதல் கன்று ஈனும் வயது 38-45 மாதங்கள். கன்று ஈனும் இடைவெளி 470 நாட்களாகும்

கிருஷ்ணா பள்ளத்தாக்கு
  • கர்நாடக மாநிலத்தின் கிருஷ்ணா ஆற்றின் வடிகால் பகுதியிலுள்ள கரிசல் மண் பகுதிகளிலிருந்து இவ்வினம் தோன்றியது
  • இம்மாடுகள் பெரிய உடலமைப்புடன், நன்கு அமைந்த தசைப்பிடிப்புகளுடன் இருக்கும்
  • இவ்வினத்தினைச் சேர்ந்த மாடுகளின் வால் தரையினை தொடும் அளவு வளர்ந்திருக்கும்
  • பொதுவாக இவ்வின மாடுகள் சாம்பல் நிறத்தில் காணப்படுவதோடு, இவற்றின் முன்னங்கால்கள் மற்றும் பின்னங்கால் பகுதிகளில் அடர்ந்த சாம்பல் நிறம் காணப்படும். வளர்ந்த பசு மாடுகள் வெள்ளை நிறத்துடன் காணப்படும்
  • இம்மாட்டினங்களின் காளை மாடுகள் நல்ல வேலைத்திறன் மிக்கவையாதலால் உழவிற்கும், இதர விவசாய வேலைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன
  • இவ்வினத்தினைச் சேர்ந்த பசுக்களின் பால் உற்பத்தி சுமாராக இருக்கும். இவற்றின் சராசரி பால் கொடுக்கும் அளவு 916 கிலோக்களாகும்
டியோனி
  • இந்த மாட்டினங்கள் டோங்கார்பட்டி, டோங்காரி, வான்னெரா, வாக்ட், பலன்க்யா, சிவேரா என்ற பல பெயர்களால் அறியப்படுகின்றன
  • இம்மாட்டினம் மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள மாரத்வாடா பகுதியிலிருந்தும், அருகிலுள்ள கர்நாடகா மற்றும் மேற்கு ஆந்திரப்பிரதேச மாநிலத்திலிருந்தும் தோன்றியது
  • இவற்றின் தோல் புள்ளிகளுடன் கூடிய கருப்பு அல்லது வெள்ளை நிறத்துடன் காணப்படும்
  • முதல் கன்று ஈனும் வயது 894-1540 நாட்களாகவும் சராசரியாக 940 நாட்களாக இருக்கும்
  • இம்மாட்டினங்களின் பால் உற்பத்தி 636-1230 கிலோவாகவும், சராசரியாக 940 கிலோவாக இருக்கும்
  • கன்று ஈனும் இடைவெளி 447 நாட்களாக இருக்கும்



ஆதாரம்: www.tanuvas.ac.in