Sunday, September 29, 2019

கால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு முறைகள்


நோக்கம்:-
ஒருங்கிணைந்த பண்ணையத்தில் கால்நடை வளர்ப்பு ஒரு முக்கிய அங்கமாகும். உழவுத்தொழிலும், கால்நடை வளர்ப்பும் ஒன்றை ஒன்று சார்ந்த தொழில்களாகும். கால்நடை வளர்ப்பு விவசாயக் குடும்பத்தின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதுடன் வீட்டு வருமானத்தையும் அதிகரிக்கிறது. பண்ணை மற்றும் வீடுகளில் உள்ள கழிவுப் பொருட்களை கால்நடைகளுக்கு உணவாகப் பயன்படுத்துவதால் பால் உற்பத்தி செலவு குறையும். கால்நடைகள் மனிதனுக்கு உணவு எரிபொருட்கள் உரம், தோல் மற்றும் இழுவை சக்தி போன்றவற்றை வழங்குகின்றன.

தமிழகம் கால்நடை வளர்ப்பு மற்றும் உற்பத்தியில் மற்ற மாநிலங்களைவிட முன்னிலை வகிக்கிறது. இந்திய கால்நடைகளின் எண்ணிக்கையில் ஏழு சதவிகிதமும், கோழிகளின் எண்ணிக்கையில் மூன்று சதவிகிதமும் கொண்டுள்ள தமிழகம், பால் உற்பத்தியில் ஐந்தாம் இடத்தையும், முட்டை உற்பத்தியில் இரண்டாம் இடத்தையும் வகிக்கிறது. கால்நடை வளர்ப்பு குறித்த அறிவியல் மற்றும் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய உழவர் பயிற்சி நிலையங்கள் மற்றும் அறிவியல் நிலையங்கள் தமிழகத்தில் 27 இடங்களில் உள்ளன.

கால்நடை தீவனங்கள்:
அடர் தீவனம்
கறவை மாடு மற்றும் எருமையினங்களுக்கு தேவையான எரிசக்தி, புரதம், தாதுஉப்புக்கள் மற்றும் வைட்டமின்கள் அடங்கிய தீவனம் அடர் தீவனம் எனப்படும். இதில் தானியம், பிண்ணாக்கு, பயறு வகை, குருணை, தவிடு, தாது உப்பு, சாப்பாட்டு உப்பு போன்ற பொருட்கள் உள்ளன. இவற்றின் அன்றாட உடல் பராமரிப்பிற்கு தேவையான 1.5 கிலோ அடர் தீவனத்தை இரண்டாகப் பிரித்து காலையிலும், மாலையிலும் பால் கறப்பதற்கு முன் கொடுக்க வேண்டும். உற்பத்தி மற்றும் பாலில் உள்ள கொழுப்பு, கொழுப்பு இல்லாத திடப்பொருள் (Solids not fat SNF) என்பதற்கு ஏற்ப பால் கறவைக்கு, கறவை ஒன்றிற்கு 400 கிராம் முதல் 500 கிராம் அடர்தீவனம் அளிக்க வேண்டும்.
பசுந்தீவனம்
மாடு மற்றும் எருமைகளுக்கு வைட்டமின் A சத்தைக் கொடுப்பவை பசுந்தீவனமாகும். இச்சத்து சினை பிடிப்பதற்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். எனவே நாள் ஒன்றுக்கு கால்நடையின் உடல் எடையில் எட்டு முதல் பத்து சதம் அளவிற்கு பசுந்தீவனம் அளிக்கப்பட வேண்டும். தீவனச் சோளம், தீவன மக்காச்சோளம், கொழுக்கட்டைப் புல், கம்பு நேப்பியர் புல், எருமைப்புல் முதலிய பயறுவகை அல்லாத புல் வகைகளும், அகத்தி, சூபாபுல், குதிரைமசால், வேலிமசால் போன்ற பயறுவகை தீவனப்பயிர்களும் பசுந்தீவனமாகப் பயன்படுத்தப்படுகின்றன.
உலர் தீவனம்
உலர் தீவனம் கொடுப்பதால் மாடு மற்றும் எருமை இனங்கள் உணவு உட்கொண்ட திருப்தியை அடையும். நாளொன்றுக்கு அதன் உடல் எடையில் ஒரு சதம் உலர் தீவனமாகிய வைக்கோல் மற்றும் உலர்ந்த சோளத்தட்டு போன்றவற்றை அளிக்கலாம். 15.4.2 ஆடு இனங்கள் : ஆடுகளுக்கு பசுந்தீவனம், உலர் தீவனம் மற்றும் கலப்புத் தீவனம் ஆகியவை அடங்கிய சரிவிகித உணவு கொடுக்க வேண்டும். ஒரு நாளைக்கு ஆடுகள் அதன் உடல் எடையில் சுமார் 5-8 சத அளவு உலர் தீவனத்தை உட்கொள்ளும். பசுந்தீவனப்பயிர்களில் வீரிய ஒட்டு தீவனப்புல் வகைகள், பயறு வகைத் தீவனப்பயிர்கள் மற்றும் மர வகைத்தீவனப்பயிர்கள் அடங்கும். உலர் தீவனமாக நிலக்கடலை உலர்ந்த செடிகள், பயறு வகைகளின் மேல் தோல் ஆகியவை அளிக்கப்படுகிறது. கலப்புத்தீவனம் சரிவிகித உணவாக தயார் செய்யப்பட்டு தீவன கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது.

கால்நடை உற்பத்தியை அதிகரிப்பதற்கான வழிமுறைகள்
 தரமான கலப்பு இனங்களை தேர்ந்தெடுத்துப் பராமரிக்க வேண்டும். சரியான இருப்பிட வசதி, முறையான சத்துள்ள தீவனமளித்தல் ஆகியவற்றின் மூலம் கால்நடைப் பண்ணைகளை சிறப்பாக நிர்வாகம் செய்ய வேண்டும். கால்நடைகளின் செயல்பாடுகள் குறித்த பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும். முறையான மருத்துவ சிகிச்சை மற்றும் தடுப்பூசிகள் மூலம் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களைத் தவிர்க்க வேண்டும். உற்பத்திக்கேற்ற சரியான விற்பனை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும்

கால்நடைகளின் முக்கிய இனங்கள்
கறவை மாடு மற்றும் எருமையினங்களுக்கான தீவனம் ஊட்டச்சத்து மிகுந்த அடர்தீவனம், நார்ச்சத்து மிகுந்த பசுந்தீவனம் மற்றும் உலர்தீவனம் என பாகுபடுத்தப்படுகிறது. பசு மாடுகள் மற்றும் எருமைகளுக்கு தீவனம் அளிக்கும் போது மேலே குறிப்பிட்ட மூன்று வகையான தீவனங்களையும் சரியான விகிதத்தில் கொடுக்க வேண்டும்.

மாடுகளுக்கான இருப்பிடம் கொட்டகை என்று அழைக்கப்படுகிறது. மாடுகளின் ஆரோக்கியத்திற்கும், பாதுகாப்பிற்கும் கொட்டகை அமைக்க வேண்டும். இதனால் மாடுகளின் முழு உற்பத்தித் திறனைப் பெறமுடியும். மாட்டுக்கொட்டகையில் மாடுகள் இரண்டு முறைகளில் பராமரிக்கப்படுகின்றன.

1) ஒரு வரிசை முறை
2) இரு வரிசைமுறை.

பதினைந்து மாடுகள் வரை உள்ள பண்ணைகளுக்கு ஒரு வரிசை முறை ஏற்றதாகும். இரண்டு வரிசை முறையில் பதினைந்துக்கும் அதிகமான மாடுகளின் எண்ணிக்கை பராமரிக்கப்படுகிறது. இம்முறையில் வாலுக்கு வால் முறை மற்றும் முகத்திற்கு முகம் முறை என இரண்டு விதமான கொட்டகை அமைப்பு உள்ளது.

ஆதாரம்: www.tanuvas.ac.in

No comments:

Post a Comment